

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி அடுத்துள்ள காஜுல மண்யம் பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் சென்னைக்கு செம்மரம் கடத்தப்படுவதாக அதிரடிப்படை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் வந்தது. உடனடியாக திருப்பதி-சென்னை இடையே போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூரு பகுதியில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி போலீஸாரை கண்டதும் நிற்காமல் வேகமாகச் சென்றது. பின்தொடர்ந்து துரத்திப் பிடிப்பதற்குள் லாரி தமிழக எல்லைக்குள் சென்றது. இதையடுத்து தமிழக போலீஸாரின் உதவியை ஆந்திர போலீஸார் நாடினர். லாரி குறித்த அடையாளங்களை சேகரித்த தமிழக போலீஸார் சோளிங்கர் எல்லையில் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அங்கு வந்துசேர்ந்த ஆந்திர போலீஸார் கன்டெய்னரை சோதனையிட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள 134 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் வேலூர் மாவட்டம் பரதராமி பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜூ என்பவரையும் கைது செய்தனர்.