

புனித தலங்களை அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் களமாக மாற்றியதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்துரா ராஜே மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் புகார் அளித்துள்ளார்.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானில் உள்ள பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் ராஜஸ்தான் முதல்வரான வசுந்தரா ராஜே, பார்மர் தொகுதியில் உள்ள புனித தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக தவறாக பயன்ப்படுத்தி வருவதாக அவர் புகார் அளித்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ள பதிலில், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே பார்மரில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு தனிப்பட்ட முறையில் கடந்த சனிக்கிழமை வந்தார். அவர் கோயிலுக்கு வந்தபோது தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதாக எந்த ஆதரமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜே, ஜஸ்வந்த் சிங்கால் பாஜகவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். வரும் மக்களவை தேர்தலில் ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனை அடுத்து கட்சியை எதிர்த்து, அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் களம் இறங்கியதால் அவரை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக சனிக்கிழமை இரவு பாஜக தலைமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.