

டெல்லியைச் சேர்ந்த ஆயிஷா என்ற வீரதீர பெண் கடத்தல்காரர் களை துப்பாக்கியால் சுட்டு தனது உறவினரை பத்திரமாக மீட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஆசிப் (21). இவர் தனது படிப்புச் செலவுக்காக பகுதி நேரமாக வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு ஆசிப் ஒரு சவாரிக்காக சென்றார். இரு இளைஞர்கள் அவரது காரில் ஏறினர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபோது காரை நிறுத்திய இருவரும் ஆசிப்பை அடித்து உதைத்து பர்ஸை பறித்த னர். அதில் ரூ.150 மட்டுமே இருந்தது. ஆத்திரமடைந்த அவர்கள், ஆசிபை அதே காரில் கடத்திச் சென்றனர்.
சில மணி நேரத்துக்குப் பிறகு ஆசிபின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட அவர்கள் ரூ.25,000 பணம் கேட்டு மிரட்டினர். டெல்லியின் சாஸ்திரி நகரில் உள்ள பூங்காவுக்கு பணத்துடன் வருமாறு கூறினர். இது தொடர்பாக ஆசிபின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். ஆசிபின் அண்ணன் மனைவி ஆயிஷா (33). இவர் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஆவார்.
ஆனந்த் மிட்டல் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் காரில் பூங்காவுக்கு சென்றனர். ஆயிஷாவும் அவரது கணவரும் மற்றொரு காரில் சென்றனர். அப்போது தற்காப்புக் காக தனது கைத்துப்பாக்கியையும் ஆயிஷா எடுத்துச் சென்றார்.
போலீஸாரின் அறிவுரைப்படி சாஸ்திரிநகர் பூங்காவில் கடத்தல் காரர்களிடம் பணத்தை கொடுக்க ஆயிஷா சென்றார். ஆனால் போலீஸாரின் நடமாட்டத்தை உணர்ந்த கடத்தல்காரர்கள், பஜன் பூராவில் உள்ள பூங்காவுக்கு பணத்துடன் வருமாறு செல்போனில் கூறினர். அதன்படி ஆயிஷாவும் அவரது கணவரும் பஜன்பூரா பகுதி பூங்காவுக்கு காரில் சென்றனர். போலீஸாரும் பின்தொடர்ந்தனர்.
பஜன்பூரா பூங்காவுக்கு சென் றபோது ஆயிஷா பணத்துடன் கடத்தல்காரர்களை நெருங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத வேளையில் அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து கடத்தல்காரர்களை நோக்கி சுட்டார். ஒரு கடத்தல்காரரின் தோளிலும் மற்றொரு கடத்தல்காரரின் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். ஆசிப் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆயிஷாவிடம் இருந்த கைத்துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் இணை கமிஷனர் ரவீந்திர யாதவ் கூறியபோது, ஆசிபின் உயிரைக் காப்பாற்ற துப்பாக்கியால் சுட்டதாக ஆயிஷா கூறியுள்ளார். அவரது கூற்று உண்மை என்றால் சட்டவிதிகளின்படி அவர் செய்ததில் எந்த தவறும் இல்லை. கைது செய்யப்பட்டவர்கள் ரபீ, ஆகாஷ் என்று தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.