ஜெட் ஏர்வேஸ் விமான எஞ்சினில் தீ - பெங்களூருவில் 69 பேர் உயிர் தப்பினர்

ஜெட் ஏர்வேஸ் விமான எஞ்சினில் தீ - பெங்களூருவில் 69 பேர் உயிர் தப்பினர்
Updated on
1 min read

பெங்களூருவிலிருந்து மங்களூருவுக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இஞ்ஜினில் தீப்பிடித்தது. இதனையடுத்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

கெம்பே கவுடா விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்திலிருந்து 65 பயணிகள் 4 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பெங்களூருவிலிருந்து புறப்பட்ட 15 நிமிடங்களில் கேபினிலிருந்து புகை கிளம்பியது, எஞ்சினில் தீப்பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவசரமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே தரையிறக்கப்பட்டது.

தரையிறங்கியவுடன் விமான மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு 65 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

விமானத்தில் பயணம் செய்த கனரா லைட்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜீத் கேர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு விவரித்த போது, “விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் கேபினிலிருந்து பயங்கர புகை கிளம்பி மேலும் அதிகரித்தது, எங்கள் முகத்தை மறைத்துக்கொள்ள நாப்கின்கள் வழங்கப்பட்டன.

நான் எஞ்சினுக்கு அருகில் உள்ள இடத்தில் அமர்ந்திருந்தேன், இதனால் எஞ்சின் தீப்பிடித்தது தெரிந்தது. நான் விமானப் பணிப்பெண்ணுக்கு இதனை அறிவுறுத்த அவர்கள் பைலட்டை அவர்கள் உஷார் படுத்தினர். விமானி உடனேயே அந்த எஞ்சினின் இயக்கத்தை நிறுத்தினார். பிறகு இயங்கக்கூடிய இன்னொரு எஞ்ஜின் மூலம் விமானத்தை தரையிறக்கினார். பாதுகாப்பாக இறங்கி விட்டோம், அதிர்ஷ்டவசமாகவே உயிர் பிழைத்தோம்” என்றார்.

தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இது நடந்து கொண்டிருக்கும் போது தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் வானத்திலேயே வட்டமடிக்க அறிவுறுத்தப்பட்டன, அதே போல் புறப்படத் தயாராக இருந்த 5 விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பிறகு 10.51 மணியளவில் இயல்பு நிலை திரும்பியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in