Published : 19 Jan 2014 01:37 PM
Last Updated : 19 Jan 2014 01:37 PM

காங்கிரஸ் தோல்வி பயத்தால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை: பாஜக

மக்களவைத் தேர்தலில் தோல்வி கண்டுவிடுவோம் என்ற அச்சத்தில்தான் காங்கிரஸ் தமது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கவில்லை என்று பாஜக கூறியுள்ளது.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தின் கடைசி நாளில், அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே கொள்ளை அடித்துவிட்டு, ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் பற்றி பேசுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது குறித்து அவர் கூறும்போது, "பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததற்கு கட்சியின் பாரம்பரியத்தைக் காரணம் காட்டுவது காலம் தாழ்ந்த நடவடிக்கை.

தங்கள் தலைவர்கள் தோல்வியைத் தழுவிவிடுவார்களே என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பதுதான் உண்மை. இப்போது, கண்ணுக்குத் தெரியாத தலைவர்களுக்கும், கண்ணுக்குத் தெரியும் தலைவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது" என்றார்.

கடந்த 2014 தேர்தலிலும் இதே நாடகத்தைதான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரங்கேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2002 குஜராத் கலவரக் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, 12 ஆண்டுகளாக தன் மீதான தவறான குற்றச்சாட்டுகளின் காரணமாக போராடியதாகவும், இந்தக் காலக்கட்டத்தில் தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டதாகவும் பாராட்டிப் பேசினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x