

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நடிகர் பவன் கல்யாண் ஆதரவு அளித்தால் வரவேற்போம் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அவர் விஜயவாடாவில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
மாநில பிரிவினை விஷயத்தில் பா.ஜ.க. மீது எந்த தவறும் இல்லை. பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி எந்த கட்சிக்கும் இல்லை. தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் மாநிலம் பிரிக்கப்பட்ட முறைதான் வெட்கக்கேடாக உள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி பாஜக. மோடி பிரதமர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மோடியுடன் கேஜ்ரிவால் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த உடன், சீமாந்திராவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.