

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், போரட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடந்து காஷ்மீரின் பதற்றமான இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக இன்று (புதன்கிழமை) பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் பதற்றமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து:
காஷ்மீரில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, காஷ்மீர் பல்கலைக்கழகம், மத்திய காஷ்மீர் பல்கலைக்கழகம், இஸ்லாமிக் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
முன்னதாக காஷ்மீரில் பத்காம் மாவட்டத்தின் துர்புக் பகுதியில் உள்ள சடூரா கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படைகள் ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு வந்த போராட்டக்காரர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினரால் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்தச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்களில் 3 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.