ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அளவு அதிகரிப்பால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சரிவு

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அளவு அதிகரிப்பால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சரிவு
Updated on
1 min read

ரொக்கமில்லா வர்த்தகத்தின் அளவு குறைந்து, ஏடிஎம் மூலம் பணம் எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏடிஎம் மூலம் எடுக்கப்படும் ரொக்கத்தின் அளவு பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு முந்தைய அளவை எட்டியிருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 2017ல் 1.52 லட்சம் கோடியாக இருந்த அளவு, பிப்ரவரி மாதத்தில் 1.93 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அளவு பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் அளவை நெருங்கி வருகிறது.

பணமதிப்பு நீக்கத்துக்கான அடிப்படை காரணங்களாக சொல்லப்பட்டவற்றில் CASHLESS ECONOMY எனப்படும் ரொக்கமில்லா வர்த்தகம் என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின், மீண்டும் ரொக்கப் பயன்பாடு ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் திட்டமிடப்பட்ட இலக்கை நோக்கி டிஜிட்டல் வர்த்தகம் செல்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

இதுகுறித்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன்னணி நிறுவனமான என்சிஆர் தலைவர் நவ்ரோஸ் தாஸ்தர் கூறும்போது, "வங்கிகளில் பணம் எடுக்கும் அளவை அதிகரித்ததன் விளைவாக மக்கள் மீண்டும் பழைய பழக்கத்திற்கு திருப்பியுள்ளனர். ஆனால் பணத்தட்டுப்பாடு முற்றிலுமாக தளர்த்தப்பட்டுள்ளது என்று சொல்ல மாட்டேன்" என்றார்.

நாட்டின் மொத்த பணம் மற்றும் நாணய புழக்கம் நவம்பர் 8 முன்புவரை ரூபாய் 17.97 லட்சம் கோடியாக இருந்தது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணம் மற்றும் நாணய புழக்கம் (மார்ச் 31-ம் தேதி வரை )13.32 லட்ச கோடியாக உள்ளது. இது ஒட்டுமொத்த அளவில் 75 சதவீதமாகும். மொபைல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஜனவரி மாதம் சற்று சரிந்திருந்த நிலையில் பிப்ரவரி மாதம் பெரும் சரிவோடு பயணிப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in