Published : 16 Jan 2015 01:22 PM
Last Updated : 16 Jan 2015 01:22 PM

ஊழல், அரசியல் தலையீடு அதிகரித்துவிட்டது: திரைப்பட தணிக்கை குழு தலைவரின் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு

திரைப்படத் தணிக்கையில் அரசு தலையீடு, ஊழல் அதிகரித்துள்ளது என்று மத்திய திரைப்படத் தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன் கூறிய குற்றச்சாட்டை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

‘மெஸஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத் தணிக்கையில் மத்திய அரசின் தலையீடு இருந்ததாகவும், தணிக்கைத் துறை உறுப்பினர்கள், அதிகாரிகளிடம் ஊழல் காணப்படுகிறது என்றும் லீலா சாம்சன் கூறினார். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் நேற்று கூறியதாவது:

திரைப்பட தணிக்கை விவகாரத்தில், மத்திய அரசு எப்போதும் விலகியே இருக்கிறது. திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் தணிக்கை குழுவின் முடிவுகளில் அரசு ஒருபோதும் தலையிடுவதில்லை. எனினும், தணிக்கை குழு உறுப்பினர் யாரையாவது கட்டாயப்படுத்தி இருந்தால், எஸ்எம்எஸ் அல்லது கடித ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், திரைப்படத் தணிக்கை குழுவில் இப்போதுள்ள உறுப்பினர்கள் அனைவரும் முந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர்கள். பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு யாரையும் நியமிக்கவில்லை.

திரைப்படத் தணிக்கையில் பிரச்சினைகள் எழுந்தால், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயத்திடம் உள்ளது. அதை தணிக்கை குழுவினர் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட ‘மெஸஞ்சர் ஆஃப் காட்’ பட விஷயத்தில் கூட தீர்ப் பாயம்தான் இறுதி முடிவெடுத்து அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு ராஜ்யவர்தன் ரதோர் கூறினார்.

‘லீலா சாம்சனின் ராஜினாமா கடிதம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு வந்து விட்டதா’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அதுபற்றி எங்களுக்குத் தகவல் இல்லை. லீலா சாம்சன் ராஜினாமா பற்றி தொலைக்காட்சியில் வந்த செய்தியை கேட்டோம். அவரது குற்றச்சாட்டால் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காகதான் விளக்கம் அளிக்கிறேன் என்றார்.

‘லீலாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்பீர்களா’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘முதலில் கடிதம் வரட்டும்’ என்று அமைச்சர் பதில் அளித்தார்.

தீர்ப்பாயத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பதவி வகிக்கிறார். தீர்ப்பாயத்தில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், மூத்த பத்திரிகையாளர் என முக்கிய பிரமுகர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும் ஓர் உறுப்பினர் விலகல்

இதனிடையே லீலா சாம்சனை தொடர்ந்து, தணிக்கை குழு உறுப்பினராக உள்ள இரா பாஸ்கரும் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரைப்பட கல்வித் துறை பேராசிரியராக உள்ள இவர் நேற்று கூறும்போது, “லீலா சாம்சன் பதவி விலகும் முடிவைத் தொடர்ந்து நானும் எனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன். நாங்கள் குழு வாக இணைந்து பணியாற்றி னோம். எங்கள் ராஜினாமா குறித்து ஏற்கெனவே விவாதித்துள்ளோம். ஆனால் மத்திய அமைச்சகத்தின் உதவியை நாட லீலா முயன்று வந்ததால் இந்த முடிவை தள்ளி வைத்திருந்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x