

ஜம்மு காஷ்மீர் முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த முப்தி முகமது சையது காலமாகிவிட்டார். காஷ்மீர் மைய நீரோட்ட அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர் முப்தி.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நக் மாவட்டத்தில் உள்ள பீஜ்பெஹாராவில் ஜனவரி 12, 1936-ல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவரே முப்தி முகமது சையது. இவர் இந்திய சமுதாயம் மற்றும் பண்பாட்டின் அடிப்படைக்கூறிலிருந்து காஷ்மீர் பிரச்சினையை அணுகினார் முப்தி. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் விதியை மறு உருவாக்கம் செய்ய முயன்றார்.
டிசம்பர் 2014-ல் தேர்தல் முடிவுகள் பெரும்பான்மையற்ற தீர்ப்பை வழங்கிய போது, கூட்டணிக்கட்சிகளுடனான வாக்குவாத உச்சத்தில் முப்தி முகமது சையது தி இந்து (ஆங்கிலம்) செய்தியாளாரிடம் நேருக்கு நேர் தெரிவிக்கும் போது, “இது தீயுடன் விளையாடுவது போன்றதே, ஆனாலும் வேறு வழியில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலை காஷ்மீர் மட்டுமே மாற்ற முடியும், இந்திய பன்முகத்தன்மை பாஜக அரசியல் போக்கை சரிசெய்து விடும், இந்த மாற்றத்துக்கு என்னாலும் உதவ முடியும்” என்றார்.
ஒரு இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக அவர் வளர்த்தெடுக்கப்பட்டதையே அவரது இருதயபூர்வ கருத்து ஒரு விதத்தில் பிரதிபலிக்கிறது. இந்திய மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக லட்சியக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை உடையவரான முப்தி, 1987-ம் ஆண்டு மீரட் மதக்கலவரங்களையடுத்து மறைந்த ராஜீவ் காந்தி அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் வான்வழிப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை துறந்தார்.
பிறகு வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் முப்தி முகமது சயீத் பதவி வகித்தார். ஆனால், தனது மகள் ருபியா சயீதை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி பிரிவினைவாத அமைப்பு கடத்திச் சென்றது, அப்போது ருபியாவை விடுவிக்க வேண்டுமெனில் சிறையில் உள்ள 5 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தது. அரசும் இந்த நிபந்தனையை ஏற்று தீவிரவாதிகளை விடுவித்தது. முப்தி உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு 5 நாட்களுக்குள் அவரது மகள் கடத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீவிரவாதிகளை விடுவித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனை பிறகு ஒரு தனிப்பட்ட சந்திப்பில் வருத்தமிக்க செய்கையாக குறிப்பிட்டார்.
1975-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் இளம் முதல்வராக முப்தி முகமது சையது பதவியேற்றிருக்க வேண்டும், ஆனால் காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அது நடக்க முடியாமல் போனது. இவர் அவரது பொறுமைக்குணத்துக்காக பெரிதும் பாரட்டப்பட்டவர்.
2002-ம் ஆண்டு காஷ்மீர் முதல்வராகும் அவரது கனவு நிறைவேறியது. இந்நிலையில் விளிம்பு நிலையில் இருந்த காஷ்மீர் மைய நீரோட்ட அரசியல் போகை மாற்றினார் சையது. பிரிவினைவாதிகளின் தாக்கம் இவர் காலக்கட்டத்தில் ஓரளவுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. மைய நீரோட்ட அரசியல் தலைவர்களுக்கான நியாயப்பாட்டை இவர் மக்கள் மத்தியில் உருவாக்கியதுடன் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளிலும் இந்தத் தலைவர்களை ஒரு அங்கமாக்கினார்.
கார்கில் போர், நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதல்களினால் பாகிஸ்தான் மீதான பகைமை உச்சத்தில் இருந்த போது, ஏப்ரல் 19. 2003-ல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆற்றிய உரையின் மூளையாக இருந்தவர் முப்தி முகமது சையது என்றால் மிகையாகாது.
விமானநிலையத்தில் வாஜ்பாயை வரவேற்று, உரையாற்றும் இடம் வரைக்கும் தானும் காரில் வருவதாக அவர் வலியுறுத்தினார். இந்த 40 நிமிட நேரத்தில் இருவரிடையே என்ன உரையாடல் நடந்தது என்பது இன்று வரை தெரியாத ஒன்றுதான். பிற்பாடு, வாஜ்பாயி பேசும்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளின் ஆச்சரியத்துக்கு இணங்க அவர் பாகிஸ்தானுடன் நிபந்தனையற்ற நட்புக்கரம் நீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில் அவரது சொந்த மண்ணில் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. 1962 மற்றும் 1967க்கு இடையே அவரால் இருமுறையே தேர்தலில் வெற்றி பெற முடிந்த்து. தேசிய மாநாட்டுக் கட்சியின் பகைப்புலமான ஜி.எம்.சாதிக், மிர் காசிம் ஆகியோருடன் இவர் உறவு வைத்துக் கொண்டது தேசிய மாநாட்டுக் கட்சியின் தீராத பகையை இவர் மீது வளர்த்தது.
சட்டம் மற்றும் அராபிய மொழியில் பட்டம் வென்றவர் சையது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு சுயாட்சி என்பதை அவர் வலியுறுத்தினார். இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு இணங்க தீர்வு காணவே அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.
2014-ல் அவர் கூறிய போது, “காஷ்மீரில் பிரச்சினை உள்ளது. மக்கள் உயிர்த்தியாக செய்துள்ளனர், பலர் மாண்டுள்ளனர். இதனால் காஷ்மீர் மக்கள் முழுதும் அரசியலாகவே உள்ளனர். அவர்களது ஆர்வத்தை நாம் புறக்கணிக்க முடியாது. நாம்தான் அவர்களிடத்தில் செல்ல வேண்டும்” என்று எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் வருத்தத்துடன் இதனைத் தெரிவித்தார் முப்தி.
அதாவது பிரிவினைவாத உணர்வுகளை மையநீரோட்டத்துக்குள் கொண்டு வந்து, இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் தலைவர்களை ஓரங்கட்டியதும், பிரிவினைவாத அரசியலை காஷ்மீர் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுடன் பிணைத்தும் 2002-ல் காஷ்மீர் பிரச்சினை தீர்வுக்கு நம்பிக்கை ஊட்டினார் முப்தி முகமது சையது. ஸ்ரீநகருக்கும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் தலைநகர் முஸாபராத்துக்கும் இடையேயான தூரத்தைக் குறிப்பிட்டு அடையாளப் பலகைகளை அவர் நிலைநாட்டினார். இந்தத் தருணத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருவித பேச்சுவார்த்தையும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் இந்த இரண்டு பகுதிகளையும் வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையிலான நட்புறவு மூலம் மீண்டும் ஒருங்கிணைக்கும் கனவு முயற்சிகளை மேற்கொண்டார் முப்தி முகமது சையது. காஷ்மீர் எல்லைகளை, அதாவது புவியியல் எல்லைகள் மட்டுமல்லாது மக்கள் மன எல்லைகளையும் அகற்ற விரும்பிய ஒரு உண்மையான இந்திய முஸ்லிம் தலைவர் முப்தி முகமது சையது என்றால் அது மிகையாகாது.