

நூறுநாள் வேலை திட்டம் என்று அழைக்கப்பட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 235 கோடி மனித சக்தி நாட்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நூறுநாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மாநில உள்ளாட்சி துறை (பஞ்சாயத்து ராஜ்) அமைச்சர்களின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ‘2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டுகளுக்கான செயலாக்கம், திட்டங்கள் மற்றும் உத்திகள்’ என்ற அறிக்கையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர சிங் வெளியிட்டார்.
பாசன வசதி
அந்த அறிக்கையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த 2015-16-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் 235 கோடி மனித சக்தி நாட்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
“இப்பணிகள் மூலம் 46.43 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வாய்ப்பு பெற்றுள்ளது. 33.61 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர். மொத்த பயனாளிகளில் 55 சதவீதம் பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் கூலி
மத்திய அமைச்சர் வீரேந்திர சிங் பேசும்போது, “இத்திட்டத்தில் தற்போது உரிய நேரத்தில் கூலி வழங்கப்படுவதால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 49 மனித சக்தி நாட்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் மிக அதிக அளவாகும்.
ரூ. 43 ஆயிரம் கோடி
கடந்த நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் துக்கு பட்ஜெட்டில் 37 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இது நடப்பு நிதியாண்டில் ரூ. 43 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரிக் கப்பட்டுள்ளது. அதாவது கூடு தலாக 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி யாண்டில் 235 கோடி மனித சக்தி நாட்களுக்கு பணி வழங்கியது 5 ஆண்டுகளில் இல்லாத சாதனை அளவாகும்” என்றார்.
- பிடிஐ