

விசா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள தேவயானி கோப்ரகடே, தனக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவதற்கான காலக்கெடுவை ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்குமாறு நியூயார்க் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்க சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் மீது 30 நாட்களுக்குள் குற்றச்சாட்டை பதிவு செய்யப்பட வேண்டும். வரும் 13-ஆம் தேதியுடன் தேவயானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யும் காலக்கெடு முடிவடைகிறது.
இந்நிலையில், குற்றச்சாட்டைப் பதிவு செய்ய மேலும் 1 மாத கால அவகாசம் வழங்குமாறு நியூயார்க் மாகாண நீதிபதியிடம் தேவயானியின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக உண்மையை வெளியே கொண்டு வர கால அவகாசம் தேவை என தேவயானி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மறுப்பு:
தேவயானி தரப்பில் காலக் கெடுவை நீட்டிக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தரப்பு வழக்கறிஞர் பிரீத் பாரா, நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேவயானி கோப்ரகடே மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில்: "இந்த ஒரு விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படக்கூடாது, பாதிக்கப்படாது என நான நம்புகிறேன்" என தெரிவித்தார்.