

டெல்லி ஜே.என்.யூ. போராட்ட வீடியோ உண்மையானது என்று சிபிஐ ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் அப்சல் குருவின் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது ‘நீதி படுகொலை’ என்று நிகழ்ச்சியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது கண்ணையா குமார் உள்ளிட்டோர் தேசத்துக்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ ஆதாரங்களை மையமாக வைத்து கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உட்பட 5 பேர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு நியமித்த குழு விசாரணை நடத்தியது. அந்த குழு ஜேஎன்யூ போராட்டம் தொடர்பான 7 வீடியோக் களை ஹைதராபாத் ஆய்வகத்துக்கு அனுப்பியது. அதில் 2 வீடியோக்கள் போலியானவை என்றும் மற்றவை உண்மையானவை என்றும் அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜேஎன்யூ போராட்டம் தொடர்பான மூலப் பிரதி வீடியோவை டெல்லி போலீஸார் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள சிபிஐ ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், அந்த வீடியோ உண்மையானது என்று அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையில் சிபிஐ ஆய்வக அறிக்கை முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.