வேதாந்தா நிறுவனத்தின் நியமகிரி சுரங்கத் திட்டத்தை போராடி தடுத்த பிரபுல்ல சமந்த்ராவுக்கு சுற்றுச்சூழல் விருது

வேதாந்தா நிறுவனத்தின் நியமகிரி சுரங்கத் திட்டத்தை போராடி தடுத்த பிரபுல்ல சமந்த்ராவுக்கு சுற்றுச்சூழல் விருது
Updated on
1 min read

கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேரில் வேதாந்தா நிறுவனத்தின் நியமகிரி கனிவளம் தோண்டும் திட்டத்தை வெற்றிகரமாக தடுத்த சமூக செயல்பாட்டாளர் பிரபுல்ல சமந்த்ரா என்பவருக்கு சான் பிரான்சிஸ்கோவில் விருது வழங்கப்பட்டது.

விருது பட்டயத்தில், “டாங்ரியா கோண்ட் நில உரிமைகளை காக்கவும் நியமகிரி மலைகளின் சுற்றுச்சூழல் நலனை பாதுகாப்பதற்காகவும் வரலாறு காணாத 12 ஆண்டு சட்டப்போராட்டம் நடத்திய பிரபுல்ல சமந்த்ரா” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அலுமினியம் தாதுவுக்காக நியமகிரி மலைப்பகுதிகள் கார்ப்பரேட் கவனத்தை ஈர்த்தது. சமந்த்ராதான் பழங்குடியினரைத் திரட்டி, சட்டப்போராட்டத்துக்கு அவர்கள் உரிமைக்காக தயார் படுத்தினார். பாக்சைட் எடுக்கும் சுரங்கத் திட்டத்தை வேதாந்தா நிறுவனம் பாதியிலேயே கைவிட நேர்ந்தது.

வழக்கறிஞராக பயிற்சி பெற்ற பிரபுல்ல சமந்த்ரா, ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்க காலத்திலிருந்தே சமூக செயல்பாட்டாளராக ஈடுபட்டு வருபவர். நீடித்த வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் இனி வெறும் உதட்டுச் சேவை மட்டுமே செய்து கொண்டிருக்க முடியாது என்பதை உறுதி செய்ய தொடர்ந்து செயல்படப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

நமக்கு தேசிய சுரங்கக் கொள்கை தேவை, எவ்வளவு இயற்கை வளங்களை நாம் சுரங்கத் தொழிலுக்காக பயன்படுத்தப் போகிறோம் என்பதை அறிவுபூர்வமாகத் தீர்மானிக்க வேண்டும் என்று திங்களன்று விருது அறிவிக்கும் முன்னரே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த விருது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்களுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒன்றாகும். மேலும் கார்ப்பரேட் திட்டங்களினால் வாழ்வாதாரத்தை இழப்போருக்கு அதிகாரம் அளித்து சட்ட ரீதியாக போராடத் திரட்டுவதும் இந்த விருதுகளுக்கு ஒரு அடிப்படையான அம்சமாகும்.

சமந்த்ராவைத் தவிர விருது பெற்றவர்கள்: அமெரிக்காவின் மார்க் லோபஸ், ஸ்லோவேனியாவின் யுரோஸ் மேக்ரெல், கவுத்தமாலாவின் ரோட்ரிகோ டோட், காங்கோ குடியரசின் ரோட்ரிக் கடெம்போ, ஆஸ்திரேலியாவின் வெண்டி போமேன்.

1990-ம் ஆண்டில் இந்த விருது முதன் முதலாக நிறுவப்பட்டதிலிருந்து மேதா பட்கர், எம்.சி.மேத்தா, ரஷிதா பீ, சம்பரன் சுக்லா, ரமேஷ் அகர்வால் ஆகிய இந்திய சமூக ஆர்வலர்கள் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர், இந்தப் பட்டியலில் சமந்த்ரா 6-வது நபராக இன்று இணைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in