

ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகி தீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதால் நிலவிவரும் அமைதியின்மை காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது முறையாக கடந்த வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களுக்குப் பிறகு யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.
ஜம்மு, பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து சுமார் 100 வாகனங்களில் யாத்ரீகர்கள் நேற்று பல்தல் மற்றும் பஹல்காம் அடி வார முகாம் நோக்கிப் புறப்பட்டனர்.
புர்ஹான் வானி கொல்லப் பட்டதால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையால் இதற்கு முன் கடந்த 9-ம் தேதி அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. பின்னர் 11-ம் தேதி மாலை பலத்த பாதுகாப்புடன் யாத்திரை தொடங்கியது.
இதுவரை 1,27,350-க்கும் மேற்பட்டோர் அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.