

காங்கிரஸ் ஒரு மோசடி கட்சி என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இமாசலப் பிரதேசம், பாலம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: “காங்கிரஸ் கட்சி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. அக்கட்சி வெளியிட்ட 2009-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கை, ஓர் மோசடி ஆவணம். அந்த தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அது ஒரு மோசடி ஆவணம் என்று இதிலிருந்தே தெரிகிறதல்லவா?
தவறு செய்தால் கூட மக்கள் மன்னித்துவிடுவார்கள். ஆனால், ஏமாற்றுபவர்களை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சியில் அமரும் வாய்ப்பை அளித்தீர்கள். எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள். இந்த நாட்டிற்கு இப்போதைய தேவை ஆட்சியாளர் அல்ல; சேவகர். உங்களின் நல்லாசியுடன், நான் சேவை செய்ய விரும்புகிறேன்.
ஒவ்வொருவரின் எதிர்காலமும், 18 முதல் 28 வயதிற்குள்தான் தீர்மானிக்கப்படுகிறது.
வாக்களிக்கும்போது தவறான முடிவை எடுத்தால், டெல்லியில் வலுவற்ற ஆட்சி அமைந்து, தங்களின் வாழ்க்கையை பாதித்துவிடும் என்பதை இந்த வயதில் உள்ள இளைஞர்கள் உணர வேண்டும்.
ராணுவ வீரர்கள், நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர். அவர்களிடம் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்களை காங்கிரஸ் அரசு தவறாக வழிநடத்தி வருகிறது.
இந்த தேர்தலின் மூலம் வளமான இந்தியா உருவாக வாய்ப்பு இருப்பதாக இளைஞர்கள் நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் எதிர்பார்த் துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப் பை நான் பூர்த்தி செய்வேன்.
பணம் ஒன்றும் மரத்தில் காய்ப்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், முன்பு ஒருமுறை குறிப்பிட்டார். ஆனால், இமாசலப் பிரதேசத்தில் ஆப்பிள் மட்டுமல்ல பணமும் ஒருவரின் பழத்தோட்டத்தில் உள்ள மரங்களில் காய்க்கிறது” என்றார் மோடி.