

தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் ஒத்தி வைத்தது.
சக பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப் பட்ட வழக்கில் தருண் தேஜ்பால் மீது பனாஜி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலை யில், தேஜ்பால் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மும்பை உயர் நீதி மன்ற கோவா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மிரிதுலா பத்கர், இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் பனாஜி முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் முன், தேஜ்பால் மீது திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலை தன்னிடம் முன்வைக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.
மேலும் தேஜ்பால் தனது ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி அளித்தார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவரும் தேஜ்பால், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனேயே தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
நீதிமன்ற வாயிலில் கூடியிருந்த நிருபர்களிடம் அவர் கூறுகையில், “நான் தவறேதும் செய்யவில்லை. கண்காணிப்பு கேமராவில் அனைத்து உண்மைகளும் பதிவாகி யுள்ளன. இது உலகத்துக்கு பின்னர் தெரியவரும்” என்றார்.
பனாஜி அருகே வாஸ்கோ நகரில் சடா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேஜ்பால், வரும் மார்ச் 4-ம் தேதி, அவரது ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நீதிமன்றம் செல்ல அனுமதிக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.