

மேற்குவங்க மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த ரயில் பயணியிடம் இருந்து ரூ.99 லட்சம் ரொக்கம் மற்றும் மூன்று தங்கக் கட்டிகளை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் கீதாஞ்சலி விரைவு ரயிலில் ராய்பூரை சேர்ந்த சுபாஷ் சந்த் சுரானா (55) என்ற பயணி தனியாக பயணித்தார். ரயில் டாடாநகர் ரயில்நிலையத்தை கடந்தபோது சுரானா திடீரென மயக்கமடைந்தார்.
அடுத்த ரயில் நிலையமான காரஹ்பூரில் இருந்த ரயில்வே துறை அதிகாரிகளிடம் சுரானா மயங்கி விழுந்தது தொடர்பாக சக பயணிகள் தகவல் அளித்தனர். இதையடுத்து சுரானாவுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் மருத்துவர்களுடன் வந்தபோது மாரடைப்பால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுரானா குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக அவர் உடன் எடுத்து வந்த உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஒரு பெட்டியில் ரூ.99 லட்சத்து 3,490 ரூபாய் ரொக்கமும், 3 தங்க பிஸ்கெட் கட்டிகளும் இருந்ததைக் கண்டு ரயில்வே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக சுரானாவின் குடும்பத்தாருக்கு ரயில்வே போலீஸார் தகவல் அளித்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்திருப் பதையும் தெரிவித்துள்ளனர்.
சுரானா குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய பிறகே, எதற் காக அவர் தனியாக பெரும் தொகையை எடுத்து வந்தார்? உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர்.