அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: மருத்துவக் கருவிகள் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் - மோடி வலியுறுத்தல்

அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை: மருத்துவக் கருவிகள் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் - மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைவான கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க, மருத்துவ கருவிகள் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

டாட்டா (நினைவு) மருத்துவ மனையின் 75-ம் ஆண்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி பங்கேற்று, இவ்விழா நினைவாக நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

பவள விழா கொண்டாடும் டாட்டா (நினைவு) மருத்துவ மனைக்கு வாழ்த்துகள். இதன் நினைவாக நூல் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 75 ஆண்டுகளாக சேவை செய்து வரும் இந்த மருத்துவமனை, கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் புகழ் பெற்று விளங்குகிறது. ஏழைகளுக்கு சேவை செய்து வரும் ரத்தன் டாட்டா மற்றும் மருத்துவமனைக்கு பாராட்டுகள்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைவான கட்டணத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் புதிதாக எய்ம்ஸ் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

குறிப்பாக, மிகவும் கொடிய புற்று நோயால் பாதிக்கப்படுவோர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, இந்த நோய்க்கான சிகிச்சை குறைவான கட்டணத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பாஜக ஆட்சிக்கு வந்தபோது (2014) நாட்டில் 36 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் இருந்தன. இது இப்போது 108 ஆக அதிகரித்துள்ளது. வாரணாசி, சண்டிகர், விசாகப்பட்டினம், குவாஹாட்டி ஆகிய இடங்களில், டாட்டா நினைவு அறக்கட்டளையின் உதவியுடன் மேலும் 4 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் விரைவில் தொடங்கப்படும்.

மேலும் தேசிய சுகாதார கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர வரும் காலங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 2.5 சதவீதம் சுகாதார துறைக்கு செலவிடப்படும்.

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ கருவிகளில் 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. இதனால், இங்கு மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது.

எனவே, அனைவருக்கும் குறைவான கட்டணத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமானால், உபகரணங்களை வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in