

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அனீஸ் சலீமுக்கு 2013-ம் ஆண்டுக்கான ‘தி இந்து’ இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது.
இலக்கிய விழா
தி இந்து குழுமம் சார்பில் ‘இந்து லிட்’ என்ற இலக்கிய விழா சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்து லிட் இலக்கிய விழா சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.
விழாவில் தினமும் இலக்கியச் சொற்பொழிவு, பயிலரங்கம், குழு விவாதம் ஆகியவை நடைபெற்றன. இதில், இந்திய எழுத்தாளர்கள், சர்வதேச எழுத்தாளர்கள், இலக்கிய வல்லுநர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர். 13-ம் தேதி நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சியில் இந்திய சினிமா பற்றி நடிகர் கமல்ஹாசன், கே.ஹரிகரன் ஆகியோர் விவாதித்தனர்.
கேரள எழுத்தாளருக்கு பரிசு
இலக்கிய நிறைவு விழாவில், கேரள எழுத்தாளர் அனீஸ் சலீமுக்கு ‘வேனிட்டி பாக்’ என்ற அவரது நாவலுக்காக 2013-ம் ஆண்டுக்கான இந்து இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜிம் கிரேஸ் பரிசை வழங்கினார்.
அனீஸ் சலீம் சார்பில் அந்த நாவலின் பதிப்பாளர் பிரணவ் குமார் இலக்கியப் பரிசை பெற்றுக்கொண்டார். குட்டி பாகிஸ்தான் என அழைக்கப்படும் வேனிட்டி பாக் நகரத்தைச் சேர்ந்த ஒரு சிறுபான்மை வகுப்பு இளைஞர் பற்றிய நகைச்சுவை நாவல்தான் ‘வேனிட்டி பாக்’ என்பது குறிப்பிடத்தக்கது. புதினங்களுக்கான இந்து பரிசு சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைத்தது.