Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்: பணப் பரிவர்த்தனை முடங்கும் அபாயம்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில் முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வாராக் கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் இன்று (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்கியது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:

வேலைநிறுத்தத்தில் 25 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் துறை வங்கிகள், 6 அயல்நாட்டு வங்கிகள், 40 கிராமிய வங்கிகளின் ஊழியர் களும் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வுள்ளனர். இதனால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கும்.

குறிப்பாக வங்கிகளில் பணம் போடுதல், டி.டி. எடுப்பது, காசோலைகள் மற்றும் பணம் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 15 லட்சம் காசோலைகள் முடங்கும். இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x