

பிஹார் மாநிலம், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் எம்.பி. ஷஹாபுதின் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகேஷ்வர் பிரசாத் ‘ஷஹாபுதின் விடுதலை, எனக்கு மரண தண்டனை’ என்று ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
சந்தாபாபு என்று அழைக்கப்படும் சந்திரகேஷ்வர் பிரசாத் என்பவரின் 3 மகன்களும் ஷஹாபுதின் ஆட்களால் கொலை செய்யப்பட்டதான வழக்கில்தான் தற்போது ஷஹாபுதினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடைசியாக கொல்லப்பட்ட ராஜிவ் ரோஷன் வழக்கில் ஷஹாபுதினுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சந்தாபாபு தற்போது சிவானில் தன்னுடைய உடல் நலம் குன்றிய மனைவி கலாவதி தேவியுடனும், மாற்றுத் திறனாளி மகனுடனும் ஒரே அறை மட்டுமே கொண்ட சிறிய இடத்தில் வசித்து வருகிறார். 2 மகன்களைக் கொன்றதற்கான நேரடி சாட்சியம்தான் ராஜிவ் ரோஷன், ஆனால் ராஜிவ் ரோஷனையும் ஷஹாபுதின் ஆட்கள் கொலை செய்ததாகத் தெரிகிறது.
இது குறித்து சந்தாபாபு கூறும்போது, “2004-ல் எனது மகன்கள் கிரிஷ், சதீஷ் ஆகியோரை ஷஹாபுதின் ஆட்கள் கடத்திச் சென்றனர், பிறகு ஆசிட் வீசி இருவரையும் ஷஹாபுதின் ஆட்கள் கொலை செய்தனர். ராஜிவ் எனது மூத்த மகன், இவனும் கடத்தப்பட்டான், ஆனால் எப்படியோ தப்பி வந்து விட்டான். 2014-ல் ராஜிவ் சிவானுக்குத் திரும்பிய போது கொலை செய்யப்பட்டான்” என்றார்.
ராஜிவுக்கு திருமணமாகி 21 நாட்கள் ஆன நிலையில் தந்தையின் எதிரிலேயே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“நான் அனைத்தையும் இழந்து விட்டேன், இனி இழக்க என்ன இருக்கிறது?” என்று கண்ணீருடன் கூறும் சந்தாபாபு ஒரு காலத்தில் வர்த்தகராக இருந்தவர் இன்று கையும் காலும் ஊனமுற்ற நிலையில் கடும் வறுமையில் இருக்கிறார்.
“கடைகளை வாடகைக்கு விட்டு வரும் வருவாயில் பிழைப்பு நடத்துகிறோம். இல்லையெனில் பிச்சை எடுக்க வேண்டியதுதான். எனது இந்தச் சொத்தைத்தான் ஷஹாபுதின் கைப்பற்ற முயற்சித்து எனது மகன்களை கடத்திச் சென்றார்.
இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார், என்னையும் என் 4-வது மகனையும் கூட கொன்று விடுவார். சிவானில் ஷஹாபுதினை எதிர்க்கும் துணிவு யாருக்கு இருக்கிறது? அவருக்கு ஜாமீன் என்பது எனக்கு மரண தண்டனை” என்றார் சந்தாபாபு.
மேலும் அவர் கூறும்போது, “ஒருவர் கூட, முதல்வர் நிதிஷ் குமார் உட்பட, எனக்கு உதவ முன்வரவில்லை. இந்தப் பகுதியில் ஒருவர் வைத்ததே சட்டம் என்ற நிலைமையை எதிர்த்து நான் மட்டுமே போராடி வருகிறேன். என்னாலோ, என் மனைவியாலோ, என் மகனாலோ பிறர் உதவியின்றி நகர முடியாது, நாங்கள்தான் இத்தனையாண்டுகள் சிறையில் இருந்து வருகிறோம், ஷஹாபுதின் அல்ல” என்றார்.
ஷஹாபுதின் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அவரைப் பலரும் சந்தித்து மலர்க்கொத்துகளை அளித்து வருகின்றனர். 2001-ல் போலீஸுடன் 8 மணி நேரம் இவரும் இவரது ஆட்களும் சண்டையிட்ட அதே வீட்டில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் நிருபர் சந்தித்த போது, தான் சிறையில் தன்னைச் சந்திக்க வரும் இந்த மனிதர்களைத்தான் இழந்ததாகவும் தற்போது மீண்டும் இவர்களைச் சந்திப்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.
‘சிவானின் பயங்கரம்’ என்று தனக்கு பெயர் ஏற்பட்டுள்ளது பற்றி, “அது உண்மையெனில் என்னை ஏன் இவ்வளவு பேர் வந்து சந்திக்க வேண்டும்? எப்படி தேர்தல்களில் மிகப்பெரிய வாக்குகளுடன் நான் வெற்றி பெறுகிறேன். மக்கள் என்னை நேசிக்கிறார்கள், என்னைப் பற்றி பயங்கர பிம்பங்களெல்லாம் ஊடகங்களின் கற்பனை’ என்றார் ஷஹாபுதின்.