சபர்மதி குண்டுவெடிப்பு வழக்கு: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பல்கலை. மாணவர் விடுவிப்பு

சபர்மதி குண்டுவெடிப்பு வழக்கு: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பல்கலை. மாணவர் விடுவிப்பு
Updated on
1 min read

2000 ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வு மாணவர் குலாம் அகமது வானியை உ.பி.யின் பாரபங்கி நீதிமன்றம் நேற்று விடுவித்தது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் குலாம் அகமது வானி, அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மொபின் ஆகியோரை நீதிமன்றம் விடுவித்ததாக இவர்களின் வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறினார்.

இதுகுறித்து அவர் தொலைபேசியில் கூறும்போது, “இருவருக்கும் எதிரான எந்தவொரு குற்றச்சாட்டும் அரசுத் தரப்பில் நிரூபிக்கப்படாததால், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் இருவரையும் கூடுதல் அமர்வு நீதிபதி எம்.ஏ.கான் விடுவித்தார்” என்றார்.

குலாம் அகமது வானியை டெல்லி போலீஸார் கடந்த 2001-ல் கைது செய்தனர். வெடிபொருட்கள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கு ஆதாரமான பொருட்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரைச் சேர்ந்தவரான வானி தற்போது லக்னோ சிறையில் உள்ளார்.

கடந்த 2000 ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, பிஹார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in