

மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சாம்பலானது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு அரண்மனையின் சுற்றுச் சுவரையொட்டி, ஏராளமான கடை கள் உள்ளன. இங்குள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட மின்கசிவால் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. இதே போல ஏடிஎம் மையத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் சாம்பலானது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். விபத்து காரணமாக அரண்மனை பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரண்மனை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, மகாராஜா யதுவீர், மகாராணி பிரம்மோதா தேவி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏதேனும் சிக்கல் வருமா என ராஜகுருக்களிடம் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரி கிறது. விரைவில் குலதெய்வமான சாமூண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.