

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ராக்கெட் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ராணுவ அதிகாரியும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு வீரர் காயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய மாவட்டங்களில் 7 முறை துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் சோதனைச் சாவடியை நோக்கி தானியங்கி துப்பாக்கி மற்றும் சிறிய ரக ராக்கெட் குண்டு களால் அதிரடித் தாக்குதலில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ராணுவ அதிகாரி நபி சுபேதார் பரம்ஜித் சிங் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் 200-வது பட்டாலியனைச் சேர்ந்த தலைமை ஏட்டு பிரேம் சாகர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ராஜேந்திர சிங் காயமடைந்தார். இந்திய ராணுவமும், இதற்குத் தக்க பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இரு வீரர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், இந்தப் பொறுப்பற்ற செயலுக்கு பாகிஸ்தான் தகுந்த பதில் கூற வேண்டும். இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ண காதி பகுதியில் இந்திய ராணுவத்தின் 2 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு அதிரடிப் படை இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறியுள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி இந்திய ராணுவ நிலைகள் மீதும், எல்லைப் பகுதியில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாகி விட்டது.
250 மீட்டருக்கு ஊடுருவல்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தினர். அப்போது சுமார் 250 மீட்டர் தொலைவுக்கு இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராஜ்நாத் சிங் ஆய்வு
காஷ்மீரில் குப்வாரா மாவட்டத் தில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த வாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று பூஞ்ச் மாவட்டத்தில் அவர்களால் இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி, சிஆர்பிஎப் இயக்குநர் ஆர்.ஆர்.பட்நாகர், உளவுப் பிரிவின் இயக்குநர் ராஜீவ் ஜெயின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பை உறுதிசெய்ய ராஜ்நாத் சிங் உத்தர விட்டார். மேலும் பல்வேறு ஆலோ சனைகளை உயரதிகாரிகளுக்கு அவர் வழங்கினார்.