

தன்பாலின உறவில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுஆய்வு செய்யும் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும்.
தன்பாலின உறவில் ஈடுபடுவது தவறில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு சமூக, மத அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்தன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன்படி தன்பாலின உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். இதில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்று 2013-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் கூறி யிருந்தது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி மத்திய அரசும், தன்பாலின உறவுக்கு ஆதரவான அமைப்பு களும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தன.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஜே.முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. நீதிபதிகளின் அறையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில், மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக தன்பாலின உறவாளர்களுக்கு ஆதரவாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாஸ் அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த மனுவில், “தன்பாலின உறவுக்கு ஆதரவான டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, பல தன்பாலின உறவாளர்கள் வெளிப்படையாக வெளியில் வந்து தங்களைப் பற்றி பொதுமக்களுக்கு தெரியப் படுத்தியுள்ளனர். இப்போது, தன்பாலின உறவு, தண்டனைக் குரிய குற்றம் என்ற தீர்ப்பால், அவர்கள் அனைவரும் தண்டனைக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தன் பாலின உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருப்பது, அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்” என்று தெரிவித் திருந்தது.
மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “தன்பாலின உறவாளர்களுக்கு நீதி மறுக்கப் பட்டதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.