

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரும் வழக்கில் விசாரணை முடிந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது நடந்த விதிமீறல்கள் மீது எடுக்கப் பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளை விளக்கினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி முன்வைத்த வாதம்: “காளை விளையாட்டு மெக்சிகோ, கனடா, அமெரிக்கா, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகளில் காலம் காலமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த விளையாட்டு உள்ளது. மற்ற விலங்குகளைப் போல் காளை பயந்த சுபாவம் கொண்டதல்ல. சில நாடுகளில் இந்த விளையாட்டின் முடிவில், ஈட்டியால் குத்தி காளையை கொன்று விடுகின் றனர். தமிழகத்தில் அப்படி எந்த துன்புறுத்தலும் செய்யப்படுவ தில்லை. கூடுதல் விதிமுறைகளை விதித்தாலும் அதை செயல்படுத்த தயார்,” என்றார்.
வெளிநாடுகளில் நடைபெறும் காளை விளையாட்டு குறித்து புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
பிராணிகள் நல வாரிய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பஞ்ச்வானி: “மத்திய அரசின் உத்தரவு, மாநில அரசின் கட்டுப்பாடுகள், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. தொடர்ந்து காளைகள் துன்புறுத்தப் படுவதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். எனவே, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முழுமை யாக தடை செய்ய வேண்டும்,” என்று வாதிட்டார்.
‘கூடுதல் நிபந்தனைகளை வேண்டுமானால் நீதிமன்றம் விதிக் கலாம், தடை விதிக்கக் கூடாது’ என்றார் மத்திய அரசு வழக்கறிஞர் ராகேஷ் கன்னா.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ராதாகிருஷ்ணன், “உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப் படவில்லை. மாநில அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது.
தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இவ்வளவு நிபந்தனைகளுக்குப் பிறகும், சட்டத்தை மீறும் ஒரு கொடூர விளையாட்டாகவே ஜல்லிக்கட்டு உள்ளது,” என்றார்.
தமிழக தரப்பு வாதங்கள் முடிந்ததையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் ரேக்ளா போட்டிகள் குறித்த விசாரணை நடந்தது. பின்னர், இந்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.