

உரிய ரத்தம் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் யூனிட் ரத்தம் வீணாகி சாக்கடையில் கொட்டப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சோமண்ணா பேசும்போது, “கர்நாடகாவில் ரத்த வங்கிகளின் செயல்பாடு குறித்தும் ஆண்டுதோறும் எவ்வளவு ரத்தம் வீணாக்கப்படுகிறது” எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஆர்.ரமேஷ்குமார் பதில் அளிக்கும்போது, “தானமாக பெறப் படும் ரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்தப்படு கிறது. இதில் மீதமுள்ள கணிசமான அளவு ரத்தம், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு காலாவதி ஆகிறது. சில நேரங்களில் ரத்தம் போதிய தரம் அற்றதாக இருப்பதால் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதேபோல் ரத்த வங்கிகளில் பாதுகாக்கப்படும் ரத்தம், அவை அடைக்கப்பட்டுள்ள பைகளில் பழுது ஏற்படுவதால் வீணாகிறது.
கர்நாடகாவில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 60 ஆயிரம் யூனிட் ரத்தம் பயன்படுத்த முடியாமல் வீணாகிறது.
கடந்த 2016-17-ல் 64,913 யூனிட் ரத்தம் வீணாக கீழே கொட்டப்பட்டது. இதில் 34,052 யூனிட் ரத்தம் காலாவதி ஆனதால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,88,537 யூனிட் ரத்தம் வீணாக்கப் பட்டது. இந்த விவகாரத்தில் ரத்தத்தை முறையாக பராமரிக்காத ரத்த வங்கிகளின் மீது கடும் நட வடிக்கை எடுக்குமாறு, மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார்.
ரத்தம் எப்போது காலாவதி ஆகும்?
இதுகுறித்து மூத்த மருத்துவர் கள் கூறும்போது, “ரத்தத்துக்கும் காலாவதி தேதி உள்ளது. ரத்த தட்டு (பிளேட்லட்) 5 நாட்களில் காலாவதி ஆகிவிடும். சிவப்பு அணுக்கள் 35 நாட்களிலும், அதில் உரிய திரவம் கலந்தால் 42 நாட்களிலும் காலாவதி ஆகிவிடும். ரத்தத்துக்காக நோயாளிகள் தவித்துவரும் நிலையில், அதிகளவில் ரத்தம் வீணாக்குவது குற்றமாகும். இதைத் தடுப்பதற்கு ரத்த வங்கிகளை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும்” என்றனர்.