

ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து மின் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சீமாந்திராவின் 13 மாவட்டங்களும் இருளில் மூழ்கியுள்ளன.
தெலங்கானா, ஹைதராபாத் பகுதிகளிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர அனல்மின் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 6,090 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை 2,990 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
சீமாந்திரா பகுதியில் அமைந்துள்ள விஜயவாடா, கடப்பா அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதேபோல், நீர் மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் 3,937 மெகாவாட்டுக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை 1,694 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
மின் ஊழியர்களின் வேலைநிறுத்தம் திங்கள்கிழமையும் தொடர்ந்ததால் மொத்த மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. இதனால் சீமாந்திராவின் 13 மாவட்டங்கள் மட்டுமின்றி தெலங்கானா பகுதியிலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தலைநகர் ஹைதராபாதிலும் மின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் உற்பத்திப் பாதிப்பு காரணமாக சீமாந்திரா பகுதிகளில் இயக்கப்படும் உள்ளூர் மின்சார ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. சில நீண்டதொலைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, சீமாந்திரா பகுதிகளுக்கு இயக்கப்படும் நீண்டதொலைவு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
ரயில்வே நிர்வாகத்தில் போதுமான டீசல் என்ஜின்கள் இல்லை. எனவே, வேலைநிறுத்தம் தொடர்ந்தால் நீண்ட தொலைவு ரயில்களை இயக்குவது பெரும் சிரமம் என்று ரயில்வே மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயநகரத்தில் தொடர்ந்து பதற்றம்
அரசு ஊழியர் கூட்டமைப்பு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த முழுஅடைப்பு போராட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. ஆனால், சீமாந்திரா பகுதி திங்கள்கிழமையும் வெறிச்சோடியே காணப்பட்டது. பதற்றம் நிறைந்த விஜயநகரத்தில் ஊரடங்கு உத்தரவும் போராட்டக்காரர்களை கண்டதும் சுடும் உத்தரவும் தொடர்ந்து அமலில் உள்ளது.
அதையும் மீறி 4-வது நாளாக திங்கள்கிழமையும் அங்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அங்கு 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதரப் பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் ஓரளவுக்கு அமைதி நிலவியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.