

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவுக்காக எப்போதும் பணியாற்றுவார் என்று கூறிய மோடி, அவரை தேசப்பற்றில்லாதவர் என்று கூறுவது தவறு என்று தெரிவித்துள்ளார்.
'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி சேனலில் சுப்பிரமணியன் சுவாமி பெயரைக் குறிப்பிடாது மோடி அளித்த பேட்டியில் கூறியது:
“என்னுடைய கட்சியோ இல்லையோ, இவ்வகையான பேச்சுகள் சரியல்ல. புகழ்பெறுவதற்கான ஆசையினால் நாட்டுக்கு நன்மை விளையப்போவதில்லை. பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். அமைப்பை விட தன்னை உயர்ந்தவராக ஒருவர் கருதுவது தவறு.
கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து நான் கூறியபோது பேச்சில் கவனமும் கட்டுப்பாடும் தேவை என்று கூறிய எனது செய்தி தெளிவானது, இதில் எனக்கு எந்தவித குழப்பங்களும் இல்லை.
ராஜனுடன் எனது அனுபவம் நன்றாகவே உள்ளது, அவர் செய்த பணியை நான் பாராட்டுகிறேன். ரகுராம் ராஜன் நம்மைக்காட்டிலும் தேசப்பற்றுடையவர் அல்ல என்று கூறுவது தவறு. அதேபோல் அவர் இந்தியாவின் நலன்களுக்காக பணியாற்றவில்லை, மாட்டார் என்று கூறுவது நியாயமாகாது. அவர் தேசப்பற்றுடையவர்தான். அவர் இந்தியாவை நேசிக்கிறார். அவர் எங்கு பணியாற்றினாலும் இந்தியாவுக்காகவே பணியாற்றுவார், அவர் தேசப்பற்றுடையவரே.
2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட அவரை நாங்கள் பதவியில் தொடர அனுமதிப்போமா என்ற ஐயங்களுடன் ஏகப்பட்ட ஊடகச் செய்திகளும் ஊகங்களும் வெளியாகின, அதாவது நாங்கள் அவரை பதவியில் தொடர அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். தற்போது அது தவறென்று நிரூபிக்கப்பட்டு விட்டது" என்று பிரதமர் மோடி கூறினார்.