

தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பக்தர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலங் கானா மாநிலத்தில் இம்முறை அமல்படுத்தப் படுவது இதுவே முதல்முறையாகும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கலாச்சார உடை கட்டாயமாக்கப்பட்டது.
ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது குர்தா, பைஜாமா ஆகியவற்றை அணியலாம். பெண்கள் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. புடவை, சுடிதார் ஆகியவற்றை அணிந்து கோயி லுக்கு வர வேண்டும். குறிப்பாக ஜீன்ஸ், டி-ஷர்ட், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப் பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதைத் தொடர்ந்து இப்போது பத்ராசலம் சீதாராமர் கோயிலிலும் இதே உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பத்ராசலம் கோயில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஜூன் 1-ம் தேதி முதல் உடை கட்டுப்பாடு திட்டத்தை முழுமையாக அமல் படுத்த திட்டமிட்டோம். அதன்படி கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கட்டாயமாக கலாச்சார உடையில் மட்டுமே வர வேண்டும்.
ஆண்கள் வேட்டி, சட்டை மற்றும் மேல் துண் டும், பெண்கள், புடவை அல்லது சுடிதார் ஆகியவற்றை அணிந்து வரலாம். இறுக்கமான நவீன உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட சிறுமிகள்கூட இறுக்கமான உடைகளை அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது. இதைப் பார்த்து மற்ற கோயில்களுக்கு செல்லும் போதும் நமது கலாச்சார உடைகளை அணிந்து செல்ல வேண்டும் என பக்தர்கள் நினைக்க வேண்டும்” என்றார்.