காங்கிரஸுக்கு சவாலாக இருக்கிறார் மோடி: ப. சிதம்பரம்

காங்கிரஸுக்கு சவாலாக இருக்கிறார் மோடி: ப. சிதம்பரம்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இருக்கிறார் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கோவாவில் நடைபெறும் ‘திங் ஃபெஸ்ட்’ நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது:

“அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மோடி எங்களுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவரை எங்களால் தவிர்க்க முடியாது. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

அதே சமயம் தனிப்பட்ட முறையில் அவரின் கொள்கைகள் குறித்தும், பொது இடத்தில் அவர் பேசும் வார்த்தைகள் குறித்தும் கவலை கொண்டுள்ளேன். இதுவரை மிகப் பெரிய பிரச்சினைகள் குறித்து எந்தவிதமான கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அவர் வெறுமனே தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறார்.

அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், கட்சியும், ஆட்சியும் ராகுல் காந்தியின் தலைமையில் இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரும் விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை இளைய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய தருணம் இது என்றே கருதுகிறேன்.

நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து தான் பங்கேற்கும் பேரணிகளில் ராகுல் காந்தி கருத்துத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்று கேட்டபோது, “நான் எதிர்பார்க்கும் அளவுக்கு மக்களைச் சந்தித்தும்,

பத்திரிகை யாளர்களைச் சந்தித்தும் பிரதமர் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்றே கருதுகிறேன்.

நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, ஏற்றுக் கொண்டாலும் சரி, அவர் கூற விரும்பும் விஷயங்களை எப்போதும் தெரிவித்தே வந்துள்ளார்” என்றார் ப.சிதம்பரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in