மாட்டிறைச்சி விழா ஏற்பாட்டாளர்கள் கைது: மைசூருவில் தலித் அமைப்புகள் கண்டனம்

மாட்டிறைச்சி விழா ஏற்பாட்டாளர்கள் கைது: மைசூருவில் தலித் அமைப்புகள் கண்டனம்
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் மைசூருவில் மாட்டிறைச்சி உணவு திருவிழா வுக்கு ஏற்பாடு செய்த தலித் அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து தலித் அமைப்பினர் நேற்று பெங்களூருவிலும், மைசூருவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கர்நாடக தலித் நல அமைப்பும், 'உண்மை குரல்' நாளிதழும் இணைந்து நேற்று முன் தினம் மாட்டிறைச்சி உணவு திருவிழா நடத்த ஏற்பாடு செய்தன. தலித்துகள் மீதான வன்முறையை கண்டிக்கும் விதமாக நடைபெற இருந்த இந்த மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில் ராம் சேனா, பஜ்ரங் தளம், நவநிர்மாண் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப் பினர் மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டால் தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து மைசூரு போலீஸார் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக தலித் நல அமைப்பினரும், முற்போக்கு சிந்தனையாளர்களும் மைசூரு டவுன் ஹால் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பேராசிரியர் மகேஷ் சந்திரகுரு, உண்மை குரல் நாளிதழின் ஆசிரியர் சாந்த ராஜூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது அங்கு இந்துத்துவா அமைப்பினரும் குவிந்ததால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்த தாக தலித் அமைப்பின் நிர்வாகி கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மாட்டிறைச்சி உணவு வகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, பெங்களூருவில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி ஆகியற்றின் சார்பாக தலித்துகள் தாக்கப்படுவதை கண்டித்தும், காஷ்மீரில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்பு களைக் சேர்ந்தவர்கள் பங்கேற்ற னர்.ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடியை கண்டித்தும், இந்துத்துவ அமைப்புகளைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

இதே போல மைசூருவில் உள்ள டவுன் ஹால் எதிரே குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாட்டிறைச்சி உணவு திருவிழாவுக்கு அனுமதி மறுத்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்தும் த‌லித் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய பேராசிரியர் மகேஷ் சந்திரகுரு,

“நாடு முழுவதும் தலித்துகள் மீது வரைமுறையற்ற வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு தவறிவிட்டது. தற்போது தலித்துகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு மனிதனின் உணவைத் தீர்மானிக்க அரசுக்கோ, அமைப்பு களுக்கோ எந்த உரிமையும் இல்லை. அறிவுள்ள எந்த மனிதனும் அடுத்தவனின் உணவு உரிமையில் தலையிடமாட்டான். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் எவ்வித மனிதாபிமானமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தலித்துகள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in