

காங்கிரஸ் கட்சியின் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக் காட்டினால் அதை வரவேற்கிறோம், அதே வேளையில் காங்கிரஸ் ஆட்சி அல்லாத மற்ற மாநிலங்களில் பிற கட்சிகள் செய்யும் ஊழல்களையும் ஊடகங்கள் கவனிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்களுடன் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது: ஆதர்ஷ் ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கையை நிராகரித்ததை தனிப்பட்ட முறையில் நான் ஏற்கவில்லை. அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த ஊழல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சோனியா காந்தி இன்று நிருபர்களிடன் பேசுகையில், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற உறுதி எடுத்துள்ளது என்றார்.