

ஜார்கண்டில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
ஜார்கண்ட் தலை நகரான ராஞ்சியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது டோனாகட்டு கிராமம்.
டோனகட்டு கிரமத்தை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் திங்கள்கிழமை தங்களது கிராமத்தில் அமைந்துள்ள மின் நிலையத்தால் சுற்று சூழல் மாசு ஏற்படுவதாகவும் இதனால் நோய்கள் பரவுவதாகவும் கூறி மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீஸார் மக்களை போரராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் அதற்கான முயற்சி எடுப்படாததால் கூடியிருந்த மக்களை நோக்கி போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸாரின் இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து டோனாகட்டு கிரமத்தின் விவசாயி சுரேஷ் குமார் படேல் கூறும் போது, "போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
இந்த மின் நிலையத்தால் முக்கிய சாலைகளை எங்கள் கிராமத்துடன் இணைக்கும் புறவழிச் சாலைகள் மிகவும் பாழடைந்து வருகிறது.
மேலும் இந்த மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆறுகளில் கலப்பதால் நீர் மாசுப்பட்டு பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமில்லாது மின் நிலையத்தில் பணிபுரிந்த கிராம மக்கள் பலருக்கு இன்னும் பல மாதங்களாக சம்பளம் வழங்கபடாமல் உள்ளது" என்றார்.
இந்நிலையில் கடந்த வாரம்தான் முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு முதல்வர் ரகுபர் தாஸ் ஜார்கண்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த திட்டங்களை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.