

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் திங்கட் கிழமையன்று பத்திரிகையாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் புதனன்று விசாரிக்க உள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த 9-ம் தேதி நடந்த அப்சல் குருவின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியின் போது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமாரை போலீஸார் கைது செய்து, தேசவிரோத வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையொட்டி ஜேஎன்யூ ஆசிரியர்களும் மாணவர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலரும் பத்திரிகையாளர்கள் நால்வரும் தாக்குதலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யூ மாணவர் என்.டி. ஜெயப்பிரகாஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
“தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீதும் தாக்குதலை வேடிக்கை பார்த்த டெல்லி காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.டி.எஸ். தலைமையிலான அமர்வு முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவை அவசர வழக்காக கருதி நாளை (புதன்கிழமை) விசாரிக்க ஒப்புக்கொண்டனர்.
முன்னதாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி பிரஸ் கிளப்பில் இருந்து உச்ச நீதிமன்றம் நோக்கி நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பேரணி சென்றனர்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் பத்திரிகையாளர் குழு இன்று சந்தித்தது. சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸ்ஸி கூறினார்.
இதற்கிடையில் “இந்திய அரசியலை தவறாக வழிநடத்துவதில் முதன்மையானவர் ராகுல் காந்தி” என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இளைஞர்களின் குரலை மத்திய அரசு ஒடுக்குவதாக ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் இதனை கூறினார்.