

கேரள காவல் துறை தலைவராக (டிஜிபி) சென்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கடந்த ஆண்டு மே 25-ம் தேதி பதவியேற்றது. இதைத் தொடர்ந்து அந்த மாநில டிஜிபியாக இருந்த சென்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அரசின் நடவடிக்கையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு, சென்குமாரை மீண்டும் டிபிஜியாக நியமிக்க உத்தரவிட்டது. ஆனால் அதனை கேரள அரசு செயல்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை லோக்கூர் தலைமையிலான அமர்வு கடந்த 5-ம் தேதி விசாரித்து கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
இந்நிலையில் சென்குமாரை மீண்டும் டிஜிபியாக நியமிக்க கேரள அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் சென்குமார் நேற்று மீண்டும் டிஜிபியாக பதவியேற்றுக் கொண்டார்.