வலுவான பிரதமரை நாட்டுக்கு கொடுத்துள்ளது பாஜக: சோனியா பேச்சுக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி

வலுவான பிரதமரை நாட்டுக்கு கொடுத்துள்ளது பாஜக: சோனியா பேச்சுக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி
Updated on
1 min read

காங்கிரஸை போல் இல்லாமல் வலுவான பிரதமர் தலைமையில் செயல்படும் அரசை நாட்டுக்கு பாஜக தந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

ஹரியாணாவில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மக்களவைத் தேர்தலின்போது 100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்போம் என்று பாஜக அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?” என கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியின் பணிகளை பாஜக அரசு தாங்கள் செய்ததுபோல் காட்டிக்கொள்ள முயல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறும்போது, “ஆட்சியை இழந்த பிறகும் சோனியாவுக்கு உரை எழுதித் தருபவர்கள் உரிய முன்தாயரிப்பின்றி எழுதித் தருவது வருத்தமாக உள்ளது. இதனால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார். இதனை அவர் கண்ணாடி வழியாக பார்த்தால் தனது தவறுகளை உணர்வார்.

கருப்பு பணத்தை மீட்க உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளாக சிறப்பு புலனாய் வுக்குழு அமைக்கவில்லை. பாஜக அரசு முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுத்து குழுவை அமைத்தது. தற்போது கருப்பு பணம் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள சுவிட்சர்லாந்து உட்பட உலகின் அனைத்து நாடுகளும் முன்வந்துள்ளன.

முந்தையை காங்கிரஸ் அரசு பணியாற்றுவது போல் காட்டிக்கொண்டது. ஆனால் மோடியின் அரசு முடிவுகள் எடுத்து செயல்படுத்தும் அரசாக உள்ளது.

வலுவற்ற பிரதமரை சோனியா நாட்டுக்கு கொடுத்தார். அவர் கூறுவதை கட்சியோ, அமைச்சர்களோ காதுகொடுத்து கேட்டதில்லை. ஆனால் பாஜக வலுவான பிரதமரை நாட்டுக்கு கொடுத்துள்ளது.

அவரது ஆட்சித்திறன் காரணமாக அவரது கருத்துகளை நம் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளும் கூர்ந்து கவனிக் கின்றன.

ஏன் முடிவுகள் பிரதமர் இல்லத்தில் எடுக்கப்படுகின்றன? ஏன் தேசிய ஆலோசனை கவுன்சில் போன்று எதுவும் இல்லை? என்பதுதான் சோனியா காந்தியின் இப்போதைய பிரச்சினை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in