

காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்குள் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை ஓட்டிச் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.5,000 அபராதம் வசூலிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி யாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா உலக புகழ் வாய்ந்தது. இங்குள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்க மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. உயிரியல் பூங்காவை ஒட்டிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் இதுவரை எத்தனை விலங்குகள் உயிரிழந்திருக்கின்றன என்ற தகவலை விளக்குமாறு அண்மையில் அசாம் அரசுக்கும், காசிரங்கா உயிரியல் பூங்கா இயக்குநருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாய தலைமை நீதிபதி சுவதேந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் நேற்று இவ்வழக்கு விசா ரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான உயிரியல் பூங்கா இயக்குநர், ‘‘கடந்த ஜனவரி முதல் இதுவரை 4 விலங்குகள் உயிரிழந் துள்ளன.
தானியங்கி நுண்ணுணர்வு வேக கட்டுப்பாடு கருவி பொருத் தப்பட்டும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி ரூ.5,000 அபராதம் விதியுங்கள். இதன்மூலம் சுற்றுச்சூழலும் காக்கப்படும்’’ என உத்தரவிட்டார்.
முன்னதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரோஹித் சவுத்ரி என்பவர் காசிரங்கா பூங்காவை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தைக் கண் காணிக்க தானியங்கி நுண் ணுணர்வு வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தும்படியும், வேகத்தைக் கண்காணிக்க கேமராக்களை வைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.