

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு கிரிக்கெட் பற்றி பேசுவதற்கு மட்டுமே நேரமுள்ளது, விவசாயிகளை காப்பாற்றுவதற்கு அல்ல என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
மத்திய வேளாண் அமைச்சர் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். என்றாலும் அவரால் இம்மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருக்கு கிரிக்கெட் பற்றி பேசுவதற்கு மட்டுமே நேரமுள்ளது. ஆனால் விவசாயிகளை காப்பாற்ற நேரமில்லை. மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வரியால் விவசாயிகள் நொடித்துப் போகிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் தேசியவாத காங் கிரஸ் இல்லாத அரசு அமைய நாம் பாடுபடவேண்டும்.
1857-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற குரல் எழுந்தது. 2014-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற குரல் எழுப்புவோம். காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல் என அவர்கள் நாட்டை கொள்ளையடித்து விட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-க்குப் பிறகு அவர்கள் எங்கிருப்பார்கள் எனத் தெரியாது.
பால் தாக்கரே எங்கள் இதயங்களில் நிரம்பியுள்ளார். காங்கிரஸ் இல்லாத மகாராஷ்டிரம், இந்தியா உருவாக வேண்டும் என்ற அவரது கனவை நாம் நிறைவேற்றுவோம்.
குஜராத் மிகவும் வளர்ச்சி யடைந்த, முன்னேறிச் செல்லும் மாநிலம் என்று சோனியா காந்தியை தலைவராகக் கொண்ட ராஜீவ் காந்தி பவுன்டேஷன் கூறியுள்ளது. ஆனால் தனது தாயாரின் தலைமையிலான நிறுவனத்தின் கருத்துக்கு மாறாக ராகுல் காந்தி பேசி வருகிறார். நல்ல அரசு அமைவதற்கான ஒரு போராட்டமே இந்தத் தேர்தல். மே 16-க்குப் பிறகு அந்த நல்ல அரசு அமையும் என்றார் மோடி.