

தங்கள் குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயை விடுவிக்க ரூ.10 ஆயிரம் கோடி பணத்தை இருப்பு தொகையாக கட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் கூறியுள்ளது.
முதலீட்டாளர்களிடம் பெற்ற ரூ.24 ஆயிரம் கோடி பணத்தை அவர்களிடம் திரும்ப அளிக்காத வழக்கில் சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் கோடியை இருப்புதொகையாகக் கட்டி அவருக்கு இடைக்கால ஜாமீன் பெறலாம் என்று கூறியிருந்தது. ஆனால் இத்தொகை அதிகமாக இருப்பதால் அதனை தங்களால் கட்ட முடியாது என்று சஹாரா குழுமம் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது. இதனால் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.