

தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 21-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இலங்கை கடற்படையின் அத்துமீறல், இளம் மீனவர் பிரிட்ஜோ படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மீனவ பிரதிநிதிகளிடம் அவர் கேட்டறிவார் என கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இளம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பிரிட்ஜோவின் உடலை வாங்காமல் அவரது குடும்பத்தினரும், மீனவ மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் தமிழக மீனவர் பிரிட்ஜோவை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. இந் நிலையில் போராட்டம் நடத்திய வர்களிடம் மத்திய அமைச்சர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பிரிட்ஜோ உடலைப் பெற்று அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்தனர்.
அதே சமயம் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கும்படி தமிழக மீனவப் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 21-ம் தேதி அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என தமிழக மீனவப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையே நேரடியாக சந்தித்துப் பேசுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துவிட்டது. தமிழக மீனவ பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் 3 மாதங்கள் கழித்து கடந்த புதன்கிழமை தான் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்துக்கு வந்தார். வந்தவுடனேயே தமிழக மீனவப் பிரதிநிதிகளைச் சந்திக்க தயாராகி விட்டார்’’ என்றார்.
மத்திய அரசின் தலையீடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தமிழக மீனவர்கள் 85 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.