Published : 19 Apr 2014 10:52 AM
Last Updated : 19 Apr 2014 10:52 AM

திருவள்ளூரில் 195 வாக்குச்சாவடிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியவை: தேர்தல் பார்வையாளர் கூட்டத்தில் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நுண் தேர்தல் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 195 வாக்குச்சாவடிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாக கண்டறியப்பட்டுள்ளன.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிககவனம் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நுண் தேர்தல் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் வீரராக ராவ் தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,014 வாக்குச்சாவடிகளில் 195 வாக்குச் சாவடிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு மற்றும் வாக்குப் பதிவினை வெப் காஸ்டிங் மூலம் பதிவு செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,806 வாக்குச்சாவடிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய 114 வாக்குச்சாவடிகளில் 71 வாக்குச்சாவடிகளை வெப் காஸ்டிங் மூலமும், 43 வாக்குச் சாவடிகளை வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்க இயலாத காரணத்தால், தேர்தல் பணிகளை நுண்பார்வையாளர்கள் மூலம் கவனத்துடன் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவற்றை தெரிந்து வைத்துக் கொண்டு தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என, ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தேர்தல் பொது பார்வையாளர் அனந்த ராமு துணை ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x