

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, அமெரிக்க விசா வழங்கும் விவகாரத்தில், மோடியுடன் பேசி பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான அவர் கூறுகையில்: தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றினால், விசா விவகாரம் குறித்து மோடியுடன் ஆலோசிக்க தயாராக இருக்கிறோம்.
மோடிக்கு விசா வழங்குவது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை, இந்திய ஊடகங்களில் தான் அது மிகைப்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே, பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போதும் அமெரிக்கா இந்தியாவுடன் நல்ல உறவில் இருந்தது. எனவே ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், இந்தியாவுடனான நல்லுறவு தொடர வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.
மோடி, அமெரிக்கா விசா பெற விரும்பினால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மற்ற விண்ணப்பதாரர்கள் போலவே அவரது விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படும். ஆனால் மோடி இன்னும் அமெரிக்கா விசா கோரி விண்ணப்பிக்கவில்லையே என்றார்.