கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வரிச்சலுகை: மத்திய அரசு பரிசீலனை

கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வரிச்சலுகை: மத்திய அரசு பரிசீலனை
Updated on
1 min read

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வோருக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

பெட்ரோல், எரிவாயு, மற்றும் ரயில் டிக்கெட்டுகள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தும் போது பரிவர்த்தனைக் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டத்தை அரசு முன்மொழிந்துள்ளது.

பணப்பரிவர்த்தனை அற்ற பொருளாதாரத்தை கட்டமைக்கவும் வரித் தவிர்ப்புப் போக்கைக் குறைக்கவும் வரைவு ஆவணம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான நடவடிக்கைகளில் எலெக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையை கட்டாயமாக்கவும் மத்திய அரசு இந்த வரைவில் முன்மொழிந்துள்ளது.

மேலும் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு கடை முதலாளிகளுக்கும் வரிக்கழிவுகள் கொடுக்க முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிநபர்களின் வர்த்தக நடவடிக்கைகளின் தரவுகளை உருவாக்கவும், இதன் மூலம் கடன் அணுக்கத்தை ஏற்படுத்தவும், வரி ஏய்ப்பை, வரித் தவிர்ப்பை குறைக்கவும், கள்ளநோட்டுகளின் புழக்கத்தை குறைக்கவும் இதன் மூலம் வழிவகை ஏற்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இது குறித்து வரைவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டதாவது: “தங்கள் செலவினங்களுக்கான தொகைகளை டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் நுகர்வோர்களுக்கு வருமான வரியில் சலுகை என்பதாக வரிச்சலுகைக்கு முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது.

ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கான நடவடிக்கைகள் கட்டாயமாக எலெக்ட்ரானிக் வழிமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் குறைந்தது 50% வர்த்தகத்துக்காவது வியாபாரிகளுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படலாம். அனைத்து எலெக்ட்ரானிக் வர்த்தக பண நடவடிக்கைகளுக்கு 1-2% மதிப்புக் கூட்டு வரியில் சலுகை தரப்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகள் மீதான கருத்துகளை ஜூன் 29-ம் தேதி வரை மத்திய அரசு வரவேற்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in