

சோனியா காந்தி மதவாத அரசியல் நடத்துவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் குற்றம்சாட்டியுள்ளார். சோனியா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது முஸ்லிம்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்று சோனியா பேசியுள்ளார். இது மத அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பேச்சு என்று ஜவதேகர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜூம்மா மசூதி இமாம் சயீத் அகமது தலைமையிலான முஸ்லிம் அமைப்பின் குழுவினரை சோனியா காந்தி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சயீத் அகமது, மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு கள் சிதறிவிடக் கூடாது என்று சோனியா காந்தி தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் சோனியா காந்தியின் இந்த பேச்சை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜவதேகர் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று மதரீதியாக சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளது தெரிகிறது. இதுதான் காங்கிரஸின் மதச்சார்பின்மையா? காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்துவது இதன் மூலம் தெளிவாகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோனியா காந்திதான் மதவாத அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் மற்றவர்கள் மதவாத அரசியல் நடத்துவதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். மோடியின் எழுச்சியை எதிர்க் கட்சிகளில் இருப்பவர்களால் பொறுத்துக் கொள்ளமுடிய வில்லை. எனவேதான் வெறுப்பு டன் கடுமையாகப் பேசி வருகின்ற னர். காங்கிரஸின் வேணி பிரசாத் வர்மா, சமாஜவாதி கட்சியின் ஆசம் கான் ஆகியோர் இந்த வெறுப்பூட்டும் பிரசாரத்தில் முன்னணியில் உள்ளார்கள்.
இவர்கள் எந்த அளவுக்கு மோடியை விமர்சிக்கிறார்களோ அந்த அளவுக்கு மோடி மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்று ஜவதேகர் கூறினார்.