Published : 05 Feb 2014 01:05 PM
Last Updated : 05 Feb 2014 01:05 PM

தெலங்கானா மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

காங்கிரஸ் கூட்டணி தலைமை யிலான மத்திய அரசின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் புதன்

கிழமை தொடங்கியது. மக்களவை யில் கூட்டம் தொடங்கியதுமே சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷமிடத் தொடங்கினர். தெலங்கானா மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசம் வாழ்க என்று எழுதப்பட்ட பதாகைகளை காட்டி கோஷமிட்டனர்.

அவர்களுக்கு எதிராக தெலங் கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள், உடனடியாக தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து அவைத் தலைவர் மீரா குமார், கூட்டத்தை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோது கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால், நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையும் ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் கூட்டம் தொடங்கியதும் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்கள் சி.எம்.ரமேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, காங்கிரஸை சேர்ந்த கே.பி.பி.ராமசந்திர ராவ் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து தெலங்கானா மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி, எம்.பி. கனிமொழி தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்திருப்பதை சுட்டிக்காட்டி, அது தொடர்பான சி.டி.யை காண்பித்தபடி அதிமுக எம்.பி. மைத்ரேயன் தலைமையிலான அக்கட்சியின் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்துக்கு இடையே, மதக்கலவரத் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே முயற்சித்தார். ஆனால், பாஜக, மார்க்சிஸ்ட், அதிமுக, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், அதை தாக்கல் செய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் துவிவேதி கருத்து தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அப்படியொரு திட்டம் ஏதுமில்லை. இப்போதுள்ள இடஒதுக்கீடு முறை தொடரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடமிருந்து வி.வி.ஐ.பி.க்களுக்கான நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாகவும், தெலங்கானா விவகாரம் தொடர்பாகவும் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும், ஹெலிகாப்டர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிக்கை வாசித்தார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அதன் பின்பும் கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால், அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x