

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மற்ற மாநில விவசாயிகள் சங்கங்களும் நேரில் வந்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை முன் உதாரணமாகக் கொண்டு தேசிய அளவில் ஒன்றிணைந்து மத்திய அரசை முற்றுகையிட ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 13 முதல் துவங்கி தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு மற்ற மாநில விவசாய சங்கங்களிடம் இருந்தும் ஆதரவு வலுத்து வருகிறது. நேற்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கம் சார்பில் உறுப்பினர்களுடன் அதன் தலைவர் சர்தார் பி.எம்.சிங் இன்று நேரில் வந்திருந்தார். தம் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அன்றாடம் 50 விவசாயிகளை போராட்டத்திற்கு அனுப்பி ஆதரவளிப்பதாகக் கூறிச் சென்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ’தி இந்து’விடம் போராட்ட சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு கூறுகையில், ’எங்கள் போராட்டத்தை முன் மாதிரியாக வைத்து மற்ற மாநில விவசாயிகள் சங்கங்களும் ஜந்தர் மந்தரில் சில நாட்களாகப் போராடி வருகின்றனர். தேசிய அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று சேர்த்து மத்திய அரசிற்கு எதிராக ஒரு முற்றுகை போராட்டம் நடத்தவும் ஆலோசனை நடைபெற்றது.’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக உத்தராகண்ட், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் ஜந்தர் மந்தர் வந்து தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இதனால், தமிழக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.