Published : 20 May 2017 07:37 AM
Last Updated : 20 May 2017 07:37 AM

அர்னாப் கோஸ்வாமியின் ‘ரிபப்ளிக் டிவி’க்கு முதலிடம்: ஆங்கில செய்தி சேனல்கள் கடும் எதிர்ப்பு - ‘டிஆர்பி’ நடைமுறையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

‘ரிபப்ளிக் டிவி’ ஆங்கில செய்தி சேனல் ‘டிஆர்பி ரேட்டிங்கில்’ முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு மற்ற ஆங்கில செய்தி சேனல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘தி பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்’ (பிஏஆர்சி) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் சேனல்கள் மற்றும் அவற்றின் நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து ‘டிஆர்பி ரேட்டிங்’ பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதிக பார்வையாளர்கள் விரும்பி பார்க்கும் சேனல்கள், நிகழ்ச்சிகள் அடிப்படையில் ‘டிஆர்பி ரேட்டிங்’ தயாரிக்கப்படுகிறது.

ஆங்கில செய்தி சேனல்கள் தொடர்பாக பிஏஆர்சி அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட பட்டியலில் அர்னாப் கோஸ்வாமி யின் ‘ரிபப்ளிக் டிவி’ செய்தி சேனல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிரபல செய்தி சேனலில் பணியாற்றி வந்த அர்னாப் கருத்து வேறுபாடு காரணமாக 2016 நவம்பரில் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். சில முதலீட்டாளர்கள் துணையுடன் ‘ரிபப்ளிக் டிவி’ என்ற ஆங்கில செய்தி சேனலை கடந்த 6-ம் தேதி அவர் தொடங்கினார்.

20 லட்சம் பேர்

ஒளிபரப்பைத் தொடங்கிய இரண்டு வாரங்களில் அந்த சேனல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மே 6 முதல் 12-ம் தேதி வரை அந்த சேனலை 20 லட்சத்து 11 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என்று பிஏஆர்சி தெரிவித்துள்ளது.

இந்த ‘டிஆர்பி ரேட்டிங்’ கணிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று இதர செய்தி சேனல்கள் குற்றம் சாட்டியுள்ளன. செய்தி ஒளிபரப்புச் சேனல்கள் இணைந்து என்பிஏ என்ற கூட்டமைப்பை உரு வாக்கியுள்ளன. இதில் 23 சேனல் கள் உறுப்பினர்களாக உள்ளன.

என்பிஏ சார்பில் பிஏஆர்சி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா வுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத் தில், “டிஆர்பி ரேட்டிங் கணிப்பு நேர்மையாக இல்லையென்றால் பிஏஆர்சி நடைமுறையில் இருந்து வெளியேறுவோம்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் என்பிஏ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொலைத் தொடர்பு ஆணைய (டிராய்) விதிகளை ‘ரிபப்ளிக் டிவி’ மீறி வருகிறது. அந்த சேனல் மீது டிராய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இதனிடையே என்டிடிவி ஆங்கில செய்தி சேனல் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “பிஏஆர்சி அமைப்பின் டிஆர்பி ரேட்டிங் நடைமுறையில் இருந்து என்டிடிவி வெளியேறுகிறது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் உள்ளிட்ட வேறு சில சேனல்களும் டிஆர்பி ரேட்டிங் நடைமுறையில் இருந்து விலகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x