தேவயானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற வேண்டும்: குர்ஷித் வலியுறுத்தல்

தேவயானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற வேண்டும்: குர்ஷித் வலியுறுத்தல்
Updated on
2 min read

இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க அரசு வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளர்.

பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் இந்திய துணைத் தூதர் தேவயானியை பொது இடத்தில் கைவிலங்கிட்டு நியூயார்க் போலீஸார் கைது செய்தனர். அவரின் ஆடையை களைந்து சோதனையிட்டனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போது, அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதிகள் குழு அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் சல்மான் குர்ஷித் வியாழக்கிழமை கூறியதாவது: "கடந்த புதன்கிழமை இரவு என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி முயற்சித்தார். ஆனால், அவரு டன் அப்போது என்னால் பேச முடியவில்லை. விரைவில் அவருடன் பேசவுள்ளேன். தேவயானி வழக்கு விசாரணை தொடர்பாக என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்.

இந்த வழக்கை வாபஸ் பெற அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இருதரப்பு உறவில் ஏராளமான முதலீடு களும் சம்பந்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் மாற்றியமைக்க இயலாது என்பதால், இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக அணுகி வருகிறோம்" என்றார்.

தேவயானி கைது நடவடிக்கை தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாகத்தான், ஜான் கெர்ரியின் தொலைபேசி அழைப்பை சல்மான் குர்ஷித் புறக்கணித்தார் என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை அதிகாரிகள் நிலையில் பேசித் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

மன்னிப்புக் கேட்க வேண்டும்

இந்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவும் பெயரளவுக்கு இல்லாமல், வெளிப்படையாக தனது தவறை ஒப்புக் கொள்வதாக தெளிவாக குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இந்த சம்பவத்திலிருந்து அனைத்து நாடுகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலை தங்கள் நாட்டுக்கு ஏற்பட்டால், உடனடியாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சசி தரூர் கூறுகையில், "தூதரக ரீதியான உறவில், ஒரு நாடு தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறதோ, அதைப் போன்று தான் மற்ற நாடும் நடந்து கொள்ளும். அமெரிக்காவின் செயல்பாட்டில் நட்புறவு இல்லாமல் போய்விட்டால், நமது பதில் நடவடிக்கைகளிலும் அது எதிரொலிக்கும்.

கைது செய்யும்போது சட்ட விதிமுறை யின்படி செயல்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், ஒரு தூதரிடம் அதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சலுகைகளை ரத்து செய்துள்ளோம்" என்றார்.

தேவயானியை கைது செய்தபோது மிகவும் மோசமாக நடத்தப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பறிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன. தேவயானி மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும். எந்தவிதமான நிபந்தனையுமின்றி வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவில் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய அமெரிக்க வர்த்தகப் பேரவையின் நிர்வாகி நானிக் ரூபானி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேவயானி கைது நடவடிக்கை தொடர்பாக எந்தவித நிபந்தனையுமின்றி அமெரிக்க அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in